இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜெ செசோனை “ஏற்றுக் கொள்ள முடியாத மனிதர்” என அறிவிக்குமாறு தேச பற்றுக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
அதன் பொது செயலாளர் வசந்த பண்டார இதனை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவத்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுத்தக் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீவன் ஜே ரெப்புடன் இணைந்து, இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமையால் இவ்வாறு அறிவிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டீவன் ஜே ரெப், புதுமாத்தளன் பகுதிக்கு விஜயம் செய்தப் போது எடுக்கப்பட்ட 3 புகைப்படங்கள், அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதில் ஒரு புகைப்படத்தில் 2009ம் ஆண்டு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் நூற்றுக் கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதாக கருத்திடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஸ்டீவன் ஜே ரெப் எல்லைகளை கடந்து செயற்பட்டிருப்பதாகவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக அமெரிக்காவின் தூதுவரை ஏற்றுக் கொள்ளப்படாத ராஜதந்திரி என்று அறிவிக்குமாறும் வசந்தபண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்டீவன் ஜே ரெப்பை சந்தித்து பேசிய மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப், இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்திருப்பதாக, ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.
அது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதன் தேசிய இணைப்பாளர் நிஷாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு வந்துள்ள யுத்தக் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீவன் ஜே ரெப் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
எனினும் இதன் போது பேசப்பட்ட விடயங்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
இதன் போது அமெரிக்க தூதரகத்துடன் இணைந்து ஸ்டீவன் ரெப் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கண்டனம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Comments[ 0 ]
Post a Comment