யாழ்ப்பாணம் பழைய சந்தை வளாகத்தில் முஸ்லிம் நடைபாதை வியாபாரிகளுக்கென 2013ம் ஆண்டு மே மாதத்தில் யாழ்ப்பாணம்மாநகர சபையினால் 29 தற்காலிக கடைகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன.
குறித்த கடைகளுக்கென மாநகரசபை உறுப்பினர் மௌலவி சுபியான் அவர்களின் ஊடாக கடைகளைப் பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் 35,000 ரூபாவினை மாநகர சபைக்கு செலுத்தியுள்ளார்கள்.
நாள் வாடகை 100 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 2013 மே மாதம் 23ம் திகதி கடைகள் யாழ் மாவட்ட அபிவிருதிக் குழுத் தலைவரும் அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் உரிமையாளர்களுக்கு வைபவரீதியாக கையளிக்கப்பட்டது.
முஸ்லிம் வியாபாரிகளும் தமது வியாபார நடவடிக்கைகளை அங்கே ஆரம்பித்திருந்தனர், குறித்த 29 கடைகளும் அமைந்திருந்த பிரதேசம் மிகவும் நெருக்கமான பிரதேசம் என்பதாலும், காற்றோட்டம் இல்லாத, மக்களின் பார்வைக்குத் தூரமான இடம் என்பதாலும் வியாபார நடவடிக்கைகள் சீராக இடம்பெறவில்லை என வர்த்தகர்கள் குறைபாடுகள் குறித்து கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்நிலையில் குறித்த 29 கடைத்தொகுதிகளில் வியாபாரம் மேற்கொள்வதில் இருந்தும் வியாபாரிகள் ஒதுங்கிக்கொண்டார்கள், 6 கடைகள் மாத்திரமே இயங்கிவந்தன. இந்நிலையில் குறித்த கடைத்தொகுதிக்கான நாளாந்த குத்தகை நிலுவை பல இலட்சங்களாக உயர்வுற்றது.
மேற்படி நிலைமைகளை மதிப்பீடு செய்த யாழ் மாநகர சபை, யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபியான், மற்றும் ஷரபுல் அனாம் ஆகியோருக்கும் அமைச்சர் டகளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பை நடாத்தி குறித்த கடைத்தொகுதியினை உடனடியாக அகற்றுதல் என்று தீர்மானித்தார்கள்.
இதன் பிரகாரம் முன்னறிவித்தல் விடப்பட்டு கடைகள் நேற்று (9-1-2014) அன்று அகற்றப்பட்டன.
இதுகுறித்து முஸ்லிம் வர்த்தகள் கருத்து வெளியிடுகின்றபோது. குறித்த கடைகளில் நாம் பல இலட்சம் ரூபாய்களை முதலீடாக இட்டிருக்கின்றோம்,
ஆனால் மாநகரசபையும் மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்களும் எமக்கு மாற்று வழிகளை ஏற்படுத்தித்தராமல் எமது பணத்தை அறவிட்டு எம்மை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கின்றார்கள் என்று கவலை வெளியிட்டார்கள்.
"உண்மைக்கு முதலிடம் " www.jaffnanetwork.com
Comments[ 0 ]
Post a Comment