இலங்கையிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்களையும் அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை இனப்பிரச்சினைத் தீர்வில் காட்டும் முகமாக பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இதற்கு வடமாகாண சபை ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டுமென மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சபையில் பிரேரணையை முன்வைத்தார்.
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கட்டடத்தில் நடைபெற்ற சபையின் நான்காவது அமர்வின்போதே சிவாஜிலிங்கம் இப்பிரேரணையை முன்வைத்தார்.
இப்பிரேரணையை வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்மொழிய மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்று உரையாற்றினார்.
பிரேரணையை முன்வைத்து சிவாஜிலிங்கம் உரையாற்றுகையில்,
இதில் குறிப்பாக 20, 30 வருடங்களாக எங்களுடைய அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு சிங்கராஜா என்ற அரசியல்கைதி 16 வயதில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று 36 வயது. 20 வருடங்களாக சிறைச்சாலையில் இருக்கிறார். ஒரு இராணுவ முகாம் தாக்குதல் கருணாவினுடைய தலைமையில் செய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார். அதுதான் குற்றம். அவருக்கு- 35 வருட சிறைத் தண்டனை இன்னும் 20 ஆண்டு 56 வயது வரை சிறையில் இருக்கவேண்டும். இது கொடுமையிலும் கொடுமை.
இன்று கே.பி. வெளியில் இருக்கிறார். கருணா வெளியில் இருக்கிறார். திருகோணமலை மாவட்ட பதுமன் வெளியில் இருக்கிறார். இது தொடர்பில் முதலமைச்சர் கூறியிருக்கிறார். எங்கள் போன்றவர்களை கொல்லுவதற்காக ஒரு குழு அமைக்கப்படுகிறது. அதற்கு தலைமை தாங்கவுள்ளார் என்று இப்படிப்பட்டவர்கள் வெளியில் இருக்கும்போது இந்த நிலை. இதுபோல் சைவகுருக்களில் ஒருவர் ரகுபதி சர்மா அவரும் மனைவியும் 20 வருடங்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய 3 குழந்தைகளும் மட்டக்களப்பில் இருக்கக்கூடிய ஆச்சிரமத்தில் கண்ணீர் வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆகவே மரண தண்டனைக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டவர்கள் கூட சிறைத் தண்டனையாக்கி 14 வருடத்தில் வெளியில் வந்துள்ளார்கள்.
சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் வழக்கை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அத்தனைபேருக்கும் பொது மன்னிப்பு வழங்கவேண்டுமென இந்த சபையில் முன் மொழிகிறேன் என்றார்.
Comments[ 0 ]
Post a Comment