இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கைக்கு அபாயகரமான பிரதிவிளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் இராஜதந்திர அதிகாரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால், இலங்கை மீதான அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் ஜயதிலக்க கூறினார்.
இறுதிக்கட்டப் போரின்போது நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்த டுவிட்டர் குறுஞ்செய்தி, 'நடுநிலையற்றது' என்றும் 'விசாரணை எதுவும் இல்லாத முன்கூட்டிய அனுமானம்' என்றும் ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
'சாதாரண ராஜதந்திர முறைப்படியான வழக்கங்களைவிட வேறுபட்ட விதத்தில் தான் அமெரிக்கா அதிகாரபூர்வமாக நடந்துகொண்டிருக்கிறது' என்று கூறிய தயான் ஜயதிலக்க, நட்பு நாடொன்றிடமிருந்து இவ்வாறான வழக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் கூறினார்.
'இந்த டுவிட்டர் குறுஞ்செய்தியைப் போல, சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையும் ஒருபோதும் சுயாதீனமாக இருக்க வாய்ப்பில்லை' என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக தயான் ஜயதிலக்க பணியாற்றிவந்தார்.
பிற்காலத்தில் அரசாங்கத்தின் பிரான்ஸ் தூதுவராகவும் பணியாற்றிய தயான், பின்னர் அந்தப் பொறுப்பிலிருந்து வெளியேறிய பின்னர் அண்மைக் காலங்களாக அரசாங்கத்தின் வெளியுறவுச் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி கொண்டவராகவும் கருத்துக்களை வெளியிட்டுவந்துள்ளார்.
Comments[ 0 ]
Post a Comment