இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்களை இந்த மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இரண்டு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை, பேச்சுவார்த்தைக்கு முன்னர் விடுதலை செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக “தி இந்து” தெரிவித்துள்ளது.
மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக நல்லெண்ண அடிப்படையில் தமிழகம் மற்றும் ஆந்திரா சிறைச்சாலைகளிலுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இந்திய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் சுதர்ஷன நாச்சியப்பன் “தி இந்து”விற்கு கூறியுள்ளார்.
அதேபோல், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான முயற்சிகளில், இந்திய அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாகவும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை  பிரதிநிதிகளுக்கான விஸாக்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துவருதாகவும் நாச்சியப்பன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் முனைப்புகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் அனுசரணையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை, உரியவாறு இடம்பெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சுதர்ஷன நாச்சியப்பம் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
Comments[ 0 ]
Post a Comment