விஜய் நடித்த ஜில்லா படம் இன்று வெளியானதை ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.
வழக்கமாக நடக்கும் இந்த கொண்டாட்ட கூத்துகள் தலைவா படத்தின் போது அடக்கி வாசிக்கப்பட்டது.
அதிகார மையத்தின் அச்சுறுத்தலால் ரசிகர்களும் தங்களின் உற்சாகத்தை வடிகட்டியே வெளிப்படுத்தினர். அதற்கெல்லாம் சேர்த்து வைத்து ஜில்லாவில் துhள் கிளப்பிவிட்டனர்.
முக்கியமாக உதயம் திரையரங்கை விஜய் ரசிகர்கள் உண்டு இல்லை என்று ஆக்கவிட்டனர். இந்த திரையரங்குக்கு அருகில் உள்ள விநாயகர் கோயிலில் ஜில்லா படப்பெட்டிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, திரைப்பட விநியோகஸ்தர்கள் சிபு, திருப்பூர் சிவகுமார், விஜய்யின் பிஆர்ஓ பி.டி.செல்வகுமார், அகில இந்திய இளைய தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் என்.ஆனந்தன் என்று பெரிய பட்டாளமே இந்த பூஜையில் கலந்து கொண்டது.
இந்த பூஜைக்கென்றே ஸ்பெஷலாக அழைத்து வரப்பட்ட யானை படப்பெட்டியை ஆசிர்வதிக்க, குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஜில்லா படப்பெட்டியை வைத்து பட்டாசுகள் முழங்க தியேட்டருக்கு பெட்டியை ரசிகர்கள் எடுத்து வந்தனர். பெண்கள் பொங்கல் பானைகளுடன் வர எங்கும் திருவிழா எஃபெக்ட்.
இது சென்னை உதயம் திரையரங்கின் காட்சி. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் கடும் உழைப்பு இந்த கொண்டாட்டத்தில் பளிச்சிட்டதை சொல்ல வெண்டும். இதேபோல் அனைத்து திரையரங்குகளிலும் பாலபிஷேகம், பட்டாசு, இனிப்பு என்று விஜய் ரசிகர்கள் அமர்க்களப்படுத்தினர்.
இந்த கொண்டாட்ட மனநிலையில் தலைவா படத்தை ஜில்லாவுக்கு பதில் திரையிட்டிருந்தால்கூட அட்டகாசமாக இருக்கு என்று ரசித்திருப்பார்கள். எனில் ஜில்லாவை எப்படி ரசித்திருப்பார்கள் என சொல்ல வேண்டியதில்லையே.
Comments[ 0 ]
Post a Comment