நாட்டில் சமாதானத்தையும், ஒழுங்கையும் பாதுகாத்து, மக்கள் நலன்களை உறுதிசெய்வதற்காக அதிகபட்ச அர்ப்பணிப்பை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
கேகாலை மானியம்கம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்தினை தெரிவித்தார்.
அனைவரும் ஒன்றிணைந்தே நாட்டிற்கு சுதந்திரத்தை வென்றெடுத்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அபிவிருத்திகளே தற்போது எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதன்பொருட்டு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது, சிலர் சேறுபூச முற்படுவதாகவும், வீதிகளை நிர்மாணிக்கும்போது அதிக செலவீனம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஊழலை ஒழிப்பதற்காக அதனுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்யும்போது, முழு நாடும் ஊழலில் மூழ்கியிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
உயர்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையில் இத்தகைய குற்றங்களை புரிவோருக்கு எதிராக தராதரம் பாராது தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.
Comments[ 0 ]
Post a Comment