வவுனியா நகர சபை ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து  மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகள் மற்றும் நகர சபை ஆகியவற்றில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்கள் மற்றும் சாரதிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
நிரந்தர நியமனம் வழங்கக்கோரி வவுனியாவில் அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையிலே மன்னார் மாவட்ட பணியாளர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு முன் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் ஒன்று திரண்ட சுகாதார ஊழியர்கள் மற்றும்  சாரதிகள் சுலோகங்களை ஏந்தியவாறு அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
சுமார் 7 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றுகின்ற தம்மை இதுவரை நிரந்தராமக்காமையினை கண்டித்து குறித்த அடையாள பணிப்பகிஸ்கரிப்பு இடம் பெற்றது.
தற்போது நிரந்தர நியமனம் வழங்குவதற்கு கா.பொ.த.சாதாரண தரத்தில் 6 பாடங்களும் இரண்டு பாடங்களில் 'சி' சித்தி தேவை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தகமை அடிப்படையில் எதிர்வருங்காலங்களில் சேவைக்கு அமர்த்தப்படுபவர்களிடம் கோரும்படியும், தற்போது சேவையில் உள்ளவர்களிடம் எதிர்பார்க்க வேண்டாம் எனவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த பகிஸ்கரிப்பில்  மன்னார் நகர சபை, பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை,மாந்தை பிரதேச சபை, முசலி பிரதேச சபை ஆகியவற்றில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்கள் மற்றும்  சாரதிகள் சுமார் 60 பேர் வரை இணைந்து குறித்த பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் ஆகியோர்   அவ்விடத்திற்குச் சென்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினர்.
இதன் போது காலை 10.30 மணியளவில் அவ்விடத்திற்குச் சென்ற வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்   பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினார். இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்த நிலையில் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது.
 
Comments[ 0 ]
Post a Comment