சகல இனத்தவர்கள் மத்தியிலும்  சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இஸ்ரேலுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி, அந்த நாட்டு ஜனாதிபதி ஷிமோன் பெரெஸ்சை நேற்று சந்தித்துள்ளார்.
ஜெரூசலேம் நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்திற்குள் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இதன்போது இஸ்ரேல் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
யுத்தத்தின் பின்னர் இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்ற விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இஸ்ரேல் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன் இஸ்ரேல் – பலஸ்தீன மோதலுக்கான தீர்வாக 2 அரசாங்கங்களை உருவாக்கும் ஐக்கிய நாடுகளின் பரிந்துரைக்கு இலங்கை ஆதரவு வழங்குவதாகவும் ஜனாதிபதி  சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சிறந்த வரலாற்றைக் கொண்ட புத்திசாதுரியமிக்க மக்கள் இலங்கையில் வாழ்வதாக இதன்போது குறிப்பிட்ட இஸ்ரேலிய ஜனாதிபதி, இலங்கை பிரமாண்டமான வெற்றியை அடைவது தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியமாகும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம்  குறிப்பிட்டுள்ளார்.
 
Comments[ 0 ]
Post a Comment