அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோடன், உளவுத்துறையில் இருந்து எத்தனை ரகசிய ஆவணங்களை தம்முடன் எடுத்துச் சென்றார் தெரியுமா? எண்ணிக்கை தெரிந்தால் தலை கிறுகிறுத்துவிடும் அளவுக்கு ஒரு எண்ணிக்கை பென்டகனில் இருந்து அமெரிக்க செனட் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 1.7 மில்லியன் ரகசிய ஆவணங்களை தம்முடன் எடுத்துச் சென்றுள்ளார் எட்வார்ட் ஸ்னோடன்!
அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை எட்வார்ட் ஸ்னோடன் அடித்துக்கொண்டு போனது பழைய கதை. இப்போது அடுத்த தமாஷ் என்னவென்றால், எத்தனை ஆவணங்களை ஸ்னோடன் அடித்துக்கொண்டு சென்றார் என்று பென்டகன் ‘ரகசியமாக’ அனுப்பிய ஆவணமும், வெளியே லீக் ஆகிவிட்டது.
இது என்ன புது குழப்பம்?
அமெரிக்க செனட்டின் தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு, பென்டகன் கடந்த திங்கட்கிழமை ‘ரகசியம் காக்க வேண்டிய ரிப்போர்ட்’, (confidential Pentagon report) ஒன்றை அனுப்பி வைத்தது. அதில்தான், எட்வார்ட் ஸ்னோடன் 1.7 மில்லியன் ஆவணங்களை தம்முடன் எடுத்துச் சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரகசிய ரிப்போர்ட் மீடியாவுக்கு லீக் ஆகிவிட்டது!
அதாவது, ரகசியம் லீக் ஆகிய விபரங்களை தெரிவிக்கும் ரகசிய ரிப்போர்ட்டும் இப்போது ரகசியம் கிடையாது! இதிலாவது ரகசியம் காக்க முடியவில்லையா?
பென்டகன் அனுப்பிய ரகசிய ரிப்போர்ட்டில், “எட்வார்ட் ஸ்னோடன் அடித்துச் சென்ற ஆவணங்களில், உலகின் பல பகுதியிலும் நடைபெறும் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் பற்றிய ரகசியங்களும் அடங்கியுள்ளன. இதனால், வெளிநாடுகளில் அமெரிக்க ராணுவம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரஷ்யாவில் அரசியல் அடைக்கலம் பெற்று தங்கியுள்ள எட்வார்ட் ஸ்னோடனை, பேசாமல் அமெரிக்காவுக்கு அழைத்து, ‘ரகசியம் காக்கும் இலாகா’ ஒன்றை அமைத்து தலைவராக்கி விடலாம் போலிருக்கிறதே!
Comments[ 0 ]
Post a Comment